×

எச்.ராஜா அநாகரீகமான அரசியல்வாதி: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: எச்.ராஜா அநாகரீகமான அரசியல்வாதி என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தேனி மாவட்ட வேட்பாளருமான ஈவிகே எஸ்.இளங்கோவன் நேற்று பகல் 2.30 மணி விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: தேனி தொகுதிக்கு நான் புதியவர் என்பது தவறு. தமிழகத்தில் எந்த மூலையில் உள்ள மக்களும் என்னை நன்றாக அறிவார்கள். 100 ஆண்டுகள் சமூக நீதிக்காக உழைத்த பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் 40 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறேன். மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றிருக்கிறேன். தேனி மக்கள் அவர்களில் ஒருவராக என்னை  ஏற்றுக்கொண்டு சிறப்பான வரவேற்பை தந்தனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வருடத்துக்கு ரூ.72,000 தருவதாக ராகுல் காந்தி கூறியதை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

காங்கிரஸ் கட்சி தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுவோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டபோது கார்த்தி சிதம்பரம் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றிருக்கிறார். ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். எனவே கார்த்தி சிதம்பரம் வெற்றி உறுதியானது. அவரை எதிர்த்து போட்டியிடும் எச்.ராஜாவை பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எச்.ராஜாவை போன்ற ஒரு அநாகரீகமான அரசியல்வாதி தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. எனவே அப்படிப்பட்ட அரசியல்வாதிக்கு அந்த தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : H. Raja ,interview ,EVGS Lalangovan , H. Raja, EVKS Ilangovan
× RELATED பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து...